உங்களது ஒரு வரி பேச்சுகள்... வெற்றிக்கான வரிகளும் கூட: வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்
உங்களது ஒரு வரி பேச்சுகள் நகைச்சுவை மட்டுமின்றி வெற்றிக்கான வரிகளும் கூட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் நாளை மறுநாளுடன் (10-ந்தேதி) நிறைவு பெறுகிறது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் இடையே நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் ஆன வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள சூழலில், அவருக்கு இன்று நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த சூழலில் நாடாளுமன்ற மேலவையில் பிரதமர் மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை பற்றி இன்று பேசும்போது, உங்களது ஒரு வரி பேச்சுகள் நகைக்சுவை நிறைந்த வரிகள். அவை வெற்றிக்கான வரிகளும் கூட. அதற்கு பிறகு எதுவும் பேச வேண்டியதில்லை என்பதே அதன் பொருள்.
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் கேட்கப்பட்டன. விரும்பப்பட்டன. உயர்வாக மதிக்கப்பட்டன. ஆனால், ஒருபோதும் அதற்கு பதிலடி வந்தது இல்லை என பேசியுள்ளார்.
உங்களது வெவ்வேறு பணிகளின் செயல்பாடுகளையும் உற்று நோக்கி கவனித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவற்றில் சில செயல்பாடுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்றிய அதிர்ஷ்டமும் எனக்கு கிடைத்தது.
ஒரு கட்சி பணியாளராக, எம்.எல்.ஏ.வாக, அவையில் எம்.பி.யாக உங்களது ஒவ்வொரு நடவடிக்கையும் கருத்தியல் சார்ந்த ஈடுபாட்டுடன் இருக்கும். கட்சி தலைவராக உங்களது தலைமைத்துவம், அமைச்சரவையில் கடின உழைப்பு அல்லது துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபை தலைவராக, உங்களது அனைத்து செயல்பாடுகளிலும் நீங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய விசயங்களை நான் பார்த்துள்ளேன்.
எந்தவொரு வேலையையும் ஒரு சுமையாக நீங்கள் எண்ணியதில்லை. ஒவ்வொரு பணியிலும் ஒரு புதிய வாழ்க்கைக்கான உயிர்மூச்சு கொடுக்க முயன்றவர் நீங்கள் என புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.