ஞானவாபி மசூதி அல்ல... அது சிவன் கோவில்... - யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு


ஞானவாபி மசூதி அல்ல... அது சிவன் கோவில்... - யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு
x

ஞானவாபி மசூதி இருக்கும் இடம் சிவன் கோவிலுக்கு சொந்தமானது என்று உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கோரக்பூர்,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் இந்து கோவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவுரங்கசீப்பின் 16-வது நூற்றாண்டில் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் ஞானவாபி நிலத்தை மீண்டும் கோவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர 1991-ம் ஆண்டு வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்து மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தில் தரையின்கீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட வாரணாசி மாவட்ட கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவையும் நேற்றி வாரணாசி கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக பா.ஜ.க.வை சேர்ந்த அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

கோரக்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், வாரணாசி என்று அழைக்கப்படும் காசியில், ஆதி சங்கராச்சாரியார் சிவபெருமானை சந்தித்தது குறித்த ஒரு கதையை யோகி ஆதித்யநாத் மேற்கோள் காட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஞானவாபி என்பதே கடவுள் விஸ்வநாதர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக அதை மக்கள் மசூதி என்று அழைக்கின்றனர். இஸ்லாமியர்கள் இந்த வரலாற்று தவறை திருத்திக்கொள்ள வேண்டும். ஞானவாபியின் சுவர்கள் உரத்து கதறுகின்றன. ஞானவாபிக்குள் ஜோதிலிங்கமும் கடவுளர்களின் சிலைகளும் உள்ளது. பக்தர்கள் அதன் உண்மையான அடையாளம் அல்லது பெயரைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையை மிகப்பெரிய தடையாகப் பார்க்கிறார்கள். கடந்த காலத்திலே நமது சமூகம் இதனை அடையாளம் கண்டிருந்தால், நம் நாடு ஒருபோதும் காலனித்துவமாக இருந்திருக்காது " என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.


Next Story