நேற்று ஜியோ இன்று ஏர்டெல் - ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிறுவனங்கள்
செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
புதுடெல்லி,
ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி, 11 சதவீதம் முதல் 21 சதவீதம் வரையில் இந்த விலையேற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வானது வரும் ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரம்பற்ற வாய்ஸ் கால் ரீசார்ஜ் ஒருமாதத்திற்கு ரூ.179 என நிர்ணயிக்கப்பட்ட கட்டணமானது, ரூ.199ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான 1.5 ஜி.பி. ரீசார்ஜ் கட்டணம் ரூ.719இல் இருந்து ரூ.859ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.2999இல் இருந்து ரூ.3599ஆக உயர்ந்துள்ளது.
கூடுதல் 1ஜிபி கட்டணம் 19இல் இருந்து 22ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் 2ஜிபிக்கான கட்டணம் 29இல் இருந்து 33ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4ஜிபிக்கான கட்டணம் 65இல் இருந்து 77ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல மற்ற ரீசார்ஜ் பிளான்களிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக நேற்று ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் கட்டணத்தையும் 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.