விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகளை முடக்குவதில் உடன்பாடு இல்லை: எக்ஸ் நிறுவனம்


விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகளை முடக்குவதில் உடன்பாடு இல்லை: எக்ஸ் நிறுவனம்
x
தினத்தந்தி 22 Feb 2024 1:22 PM IST (Updated: 22 Feb 2024 2:31 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் போராட்டங்களுடன் தொடர்புடைய 177 கணக்குகளை தற்காலிகமாக முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் டெல்லி நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13-ந் தேதி தொடங்கின.

ஆனால், பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு, கானாரி ஆகிய இடங்களில் உள்ள எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரு இடங்களிலும் பல அடுக்கு தடுப்புகள் போடப்பட்டுள்ளன. தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி அவர்களை தடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளின் போராட்டங்களுடன் தொடர்புடைய 177 கணக்குகளை தற்காலிகமாக முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் பிப்ரவரி 14 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்டன.

மேலும் உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின்பேரில், சட்டம் ஒழுங்கை பராமரிக்க 177 சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையதள இணைப்புகளைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் மற்றும் சில சமூக ஊடக தளங்களின் கணக்குகள் மற்றும் இணைப்புகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் "இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும் கருத்து சுதந்திரம் இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story