மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் பெண்கள் குழு; ராணுவத்தை தடுப்பதால் சேதம் அதிகரிப்பு


மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும் பெண்கள் குழு; ராணுவத்தை தடுப்பதால் சேதம் அதிகரிப்பு
x

மணிப்பூரில் இயங்கி வரும் ‘மெய்ரா பைபிஸ்’ எனப்படும் பெண்கள் குழு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்பால்,

மணிப்பூரில் இயங்கி வரும் 'மெய்ரா பைபிஸ்' எனப்படும் பெண்கள் குழு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுவதற்காக பல்வேறு பெண்கள் குழுக்கள் இந்திய விடுதலைக்கு முன்னரே உருவாக்கப்பட்டு இருந்தன. இதில் 'மெய்ரா பைபிஸ்' (தீபம் ஏந்தும் பெண்கள்) என்ற குழு முக்கியமானதாக உள்ளது.தொடக்க காலத்தில் 50 முதல் 70 வயது வரையிலான பெண்களே இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தனர். நாடு விடுதலை அடைந்த பிறகு, அனைத்து வயது பெண்களும் இந்த குழுக்களில் இணைக்கப்பட்டனர்.சமூகங்களை நேரடியாக பாதிக்கும் கடினமான சூழல்களில் மணிப்பூரின் ஒவ்வொரு பெண்ணும் ஒரு மெய்ரா பைபியாக செயல்படுவார். ஒவ்வொரு மெய்ரா பைபி குழுவிலும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் இடம் பெற்றிருப்பர்.

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள தற்போதைய கலவரத்தில், இந்த பெண்கள் குழுவினர் பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக விளங்கி வருகின்றனர்.மணிப்பூரின் மலைப்பிராந்தியங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக ராணுவ வீரர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனங்களில் செல்லும்போது, இந்த பெண்கள் தடிகளுடன் சாலைகளை மறித்து வீரர்களின் வாகன அணிவகுப்பை தடுக்கின்றனர்.அவர்களை அப்புறப்படுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் அழுத்தம் கொடுத்தால் உடனே தங்கள் ஆடைகளை கழற்றுவோம் என மிரட்டுகிறார்கள்.

இதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் கம்பு, தடிகளுடன் திரளும் இந்த பெண்கள், ராணுவ வீரர்களோ, அதிகாரிகளோ யாராக இருந்தாலும் அடையாள அட்டையை காட்டுங்கள் என மிரட்டி பெரும் தொல்லைகளை கொடுக்கின்றனர்.இதனால் பாதுகாப்பு படையினர், மலைப்பகுதிகளில் வன்முறையால் பாதிக்கப்படும் பழங்குடியினரை தகுந்த நேரத்தில் சென்று பாதுகாக்க முடியாமல் போவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.செய்தியாளர்கள் கூட இந்த பெண்களின் அட்டூழியங்களில் இருந்து தப்ப முடியவில்லை. இந்த பெண்களின் இத்தகைய தொல்லைகளை போலீசார் பெரும்பாலும் கண்டும் காணாமல் இருந்து விடுவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.இந்த குழுவை சேர்ந்த 5 பெண்கள் இம்பாலின் புறநகர் பகுதியில் நடந்த நாகா இன பெண் ஒருவரின் கொலையில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதைப்போல தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுவை சேர்ந்த 12 பேரை போலீசாரிடம் இருந்து இந்த பெண்கள் மீட்டு சென்ற சம்பவமும் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த பெண்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வழி தெரியாமல் பாதுகாப்பு படையினர் தவித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் சி.ஆர்.பி.எப். மகளிர் படைப்பிரிவு 3, மகளிரை கொண்ட 15 அதிரடிப்படைப்பிரிவு என சுமார் 350 பெண்கள் மட்டுமே பாதுகாப்பு படையில் இடம் பெற்று உள்ளனர். இவர்களால் ஆயிரக்கணக்கான மெய்ரா பைபி பெண்களை கட்டுப்படுத்த முடியவில்லை.எனவே மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அதிகமான பெண் பாதுகாப்பு படையினர் தேவை என அதிகாரிகள் கூறியுள்ளனர்

இதற்கிடையே குகி இன பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஹுரேம் ஹெராதாஸ் சிங்கின் வீட்டை ஏராளமான பெண்கள் நேற்று தீ வைத்து எரித்தனர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story