10 மாத குழந்தையை கரையில் விட்டுவிட்டு கால்வாயில் குதித்து இளைஞனை காப்பாற்றிய பெண்! போலீசார் பாராட்டு!!
தன்னுயிரை பொருட்படுத்தாமல் துணிச்சலாக செயல்பட்ட இளம்பெண் ரபீனாவை அந்த பகுதியினர் பாராட்டினர்.
போபால்,
மத்திய பிரதேசத்தில் கால்வாயில் மூழ்கிய 25 வயது இளைஞன் அதிர்ஷ்டவசமாக அங்கு வந்த ஒரு பெண்ணால் உயிர் தப்பினார்.
அந்த வாலிபர் நீரில் தத்தளிப்பதை கண்ட அந்த பெண் தண்ணீரில் குதித்து அவரை பாதுகாப்பாக இழுத்தாள். இருப்பினும் அந்த நபரின் நண்பரை காப்பாற்ற முடியவில்லை.
30 வயதான ரபீனா கஞ்சர் என்ற பெண்மணி, கடந்த வியாழக்கிழமை தண்ணீர் குழாயில் தண்ணீர் நிரப்புவதற்காக தனது 10 மாத குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு வெளியே சென்றிருந்தார்.
தண்ணீர் குழாய் அருகே இருக்கும் கால்வாயில், இரண்டு வாலிபர்கள் அதை எப்படி கடப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். கால்வாயை தாண்டி உள்ள ஒரு வயலில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க அவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் எதிர்பக்கம் கடந்து சென்றுவிட்டனர்.
அவர்கள் இருவரும் திரும்பி வரும் வழியில், அன்று மதியம் பலத்த மழை பெய்து, இரு கிராமங்களையும் பிரிக்கும் அந்த கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை இருவரும் கண்டனர். உடனே மறுபக்கத்தில் இருந்த அவர்களது நண்பர்கள் அவர்களை கடக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
மறுபக்கத்தில் இருந்த அவர்களது நண்பர்கள் பைக்கின் சாவியை இருவரையும் நோக்கி வீசி அவர்கள் இருவரும் மாற்றுப் பாதையில் சென்று தங்கள் கிராமத்தை அடையுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் பைக் சாவிகள் மறுபுறம் சென்றடையாமல், பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுநீரில் விழுந்தன.
அதன்பின், மறுபுறம் இருந்தவர்கள் பலமுறை எச்சரித்தனர். இதையெல்லாம் ரபீனா பார்த்துக் கொண்டிருந்தார். அவளுக்கு ராஜு என்ற இளைஞனை தெரியும். அவரும் அவர்களிடம் ஆற்றை கடக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
அதை பொருட்படுத்தாமல் இரண்டு பேரும் பெருக்கெடுத்து ஓடும் கால்வாயை கடக்க முடிவு செய்தனர். கால்வாயில் இறங்கிய சிறிது நேரத்திலேயே வேகமான நீரோட்டத்தில் சமநிலை இழந்து நீரில் இளைஞர்கள் மூழ்கத் தொடங்கினர்.
உடனே ராஜு, "அக்கா காப்பாற்று, யாராவது காப்பாற்றுங்கள்" என்று கூச்சலிட்டார். இதை கண்ட அந்த பெண் தண்ணீரில் குதித்து அவரை பாதுகாப்பாக இழுத்தாள். இருப்பினும் அந்த நபரின் நண்பரை காப்பாற்ற முடியவில்லை.பின் ராஜுவின் நண்பர் ஜிதேந்திராவின் உடல் மீட்புக் குழுவினரால் அடுத்த நாள் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து, ரபீனா கஞ்சர் கூறுகையில், "நான் இருமுறை யோசிக்கவில்லை. அவர் எனது கிராமத்தைச் சேர்ந்தவர், எனக்கு அவரைத் தெரியும். எனக்கு நீச்சல் தெரியும், நான் அவரை காப்பாற்றுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் மற்றவரைக் காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை" என்றார்.
தன்னுயிரை பொருட்படுத்தாமல் துணிச்சலாக செயல்பட்ட இளம்பெண் ரபீனாவை அந்த பகுதியினர் பாராட்டினர். இந்த துணிச்சலான சாதனைக்காக அந்த பெண்ணுக்கு போலீசார் ரொக்கப்பரிசு வழங்கியுள்ளனர். போலீசார் தலைமையில் நடந்த மீட்பு பணியில், ரபீனாவின் சகோதரரும் ஈடுபட்டார். அவருக்கும் வெகுமதி கிடைத்துள்ளது.