கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - 2 காவலர்கள் சஸ்பெண்ட்
கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரில் 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
டேராடூன்,
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 8 பேர் கொண்ட குழுவோடு, கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் புனித தளத்திற்கு யாத்திரை சென்றுள்ளார். அவரது குழுவைச் சேர்ந்த அனைவரும் யாத்திரையை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் திருப்பி அழைத்து வரப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இடம் இல்லாததால் ஒரு பெண்ணை மட்டும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் அதன் பிறகு வானிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த பெண் அன்றிரவு அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கோவில் வளாகத்தில் தங்குவதற்கான வசதிகள் இல்லாததால், காவல் அதிகாரி மஞ்சுல் ராவத் என்பவரிடம் அந்த பெண் உதவி கேட்டுள்ளார்.
அந்த பெண்ணை அன்றிரவு காவலர்கள் முகாமில் தங்குமாறு மஞ்சுல் ராவத் கூறியுள்ளார். மேலும் அவரது பாதுகாப்புக்காக ஒரு பெண் காவலரும் அங்கே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்படி கேதர்நாத்தில் உள்ள காவலர்கள் முகாமில் அந்த பெண் தங்கியிருந்த நிலையில், அங்கு மஞ்சுல் ராவத் கூறியபடி பெண் காவலர்கள் யாரும் வரவில்லை. அதே சமயம் எஸ்.ஐ. குல்தீப் நேகி என்பவர் மது போதையில் காவலர்கள் முகாமிற்கு வந்து, அங்கிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அடுத்த நாள் இந்தூருக்கு திரும்பிச் சென்று, வாட்ஸ் ஆப் மூலமாக ருத்ரபிரயாக் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி அமைக்கப்பட்ட நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் உத்தரகாண்ட் முதல்-மந்திரியின் தனிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்ட பெண் தனது புகார் மனுவை அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து டேராடூன் எஸ்.பி. பிரமோத் குமார் நேரடியாக இந்த வழக்கை விசாரித்தார். அவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், காவலர்கள் குல்தீப் நேகி மற்றும் மஞ்சுல் ராவத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.