பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; டைரி பற்றி பெற்றோர் கூறியது என்ன?


பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; டைரி பற்றி பெற்றோர் கூறியது என்ன?
x

கொல்கத்தா பலாத்கார வழக்கில், வேலை மற்றும் படிப்பு சூழல் பற்றி பெண் டாக்டர் மனஅழுத்தத்தில் இருந்த விவரங்களை அவருடைய பெற்றோர் குறிப்பிட்டு உள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். நாளை வரை (23-ந்தேதி) அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், பெண் டாக்டரின் உடல் அருகே கிழிந்த நிலையிலான டைரி ஒன்று கிடந்துள்ளது. அந்த டைரியில் சில பக்கங்கள் காணாமல் போயுள்ளன. மீதமுள்ள பக்கங்களில் அவருடைய கனவுகள், விருப்பு வெறுப்புகள், பெற்றோர் மீது கொண்ட பாசம், தங்க பதக்கம், சாதனை, உயர் படிப்பு ஆகியவை பற்றிய விவரங்கள் எஞ்சியுள்ளன. எனினும், கிழிக்கப்பட்ட பக்கங்களில் உள்ள விவரங்கள் என்னவானது? என தெரிய வரவில்லை.

இந்நிலையில், பெண் டாக்டரின் பெற்றோர் சில விசயங்களை கூறியுள்ளனர். அதில், வேலை மற்றும் படிப்பு சூழல் பற்றி அவர் மனஅழுத்தத்தில் இருந்த விவரங்களை குறிப்பிட்டு உள்ளனர். தேர்ச்சி பெற அனுமதிக்கப்படுவேனா? என தன்னுடைய சந்தேகங்களை அவர் வெளிப்படுத்தி இருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதனால், பெண் டாக்டரின் உடல் அருகே கிடைத்த அவருடைய டைரியில் கிழிக்கப்பட்ட பக்கங்களில் உள்ள விவரங்கள் இவற்றுடன் ஒத்து போக கூடிய ஒன்றா? என்ற கோணத்திலும் போலீசாரின் சந்தேகம் வலுவடைந்துள்ளது.

அவருடைய பெற்றோர் கூறியுள்ள விசயங்கள், மேற்கு வங்காள மாநில போலீசாரின் விசாரணையில் உள்ள, சந்தீப் கோஷின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளுடன் ஒன்றிணைந்து உள்ளன. முன்னாள் முதல்வர் கோஷுக்கு எதிராக 6-வது நாளாக இன்றும் சி.பி.ஐ. விசாரணை நடைபெற உள்ளது.


Next Story