குஜராத்தில் அவலம்; சிக்னல் கோளாறில் நின்ற ரெயிலில் பயணிகளிடம் கொள்ளை
சிக்னல் கோளாறு என்பது கொள்ளையர்களின் திட்டத்தின் ஒரு பகுதியா? அல்லது தொழில்நுட்ப பாதிப்பா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனந்த்,
குஜராத்தின் கெடா மாவட்டத்தில் இந்தூர் நகரை நோக்கி காந்திதம்-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் அங்கதி கிராமத்திற்கு வெளியே கட ந்த 14-ந்தேதி அதிகாலை 1.30 மணியளவில் திடீரென சிக்னல் கோளாறால் நின்றது.
இந்த இருட்டை பயன்படுத்தி கொண்டு, ஜன்னலோரம் அமர்ந்திருந்த 5 பயணிகளை இலக்காக கொண்டு பைகள் மற்றும் பர்சுகள் உள்ளிட்டவற்றை திருடர்கள் கொள்ளையடித்து விட்டு, தப்பி விட்டனர்.
இதற்காக அவர்கள், ரெயிலுக்குள் நுழையவில்லை. ஜன்னலோர பயணிகளிடம் இருந்து கிடைத்தவற்றை பறித்து கொண்டு இருளில் தப்பி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
சிக்னல் கோளாறு என்பது கொள்ளையர்களின் திட்டத்தின் ஒரு பகுதியா? அல்லது தொழில்நுட்ப பாதிப்பா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பணம், மொபைல் போன்கள் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.3.20 லட்சம் மதிப்பில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.