சக கைதிகளின் நலன்களுக்காக ரூ.5.11 கோடி வழங்க விருப்பம்: டி.ஜி.பி.க்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்


சக கைதிகளின் நலன்களுக்காக ரூ.5.11 கோடி வழங்க விருப்பம்:  டி.ஜி.பி.க்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்
x

அன்புக்கு உரியவர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கும் விரக்தியில், தற்கொலை செய்த அவர்களது குடும்பங்களை பார்த்திருக்கிறேன் என சுகேஷ் சந்திரசேகர் உருக்கமுடன் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.



புதுடெல்லி,


இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் கைது செய்யப்பட்ட பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் (வயது 33), டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபடியே தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங் என்பவரின் மனைவி அதிதியிடம் ரூ.200 கோடி மோசடி செய்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் சுகேசின் மனைவி லீனா மரியத்துக்கும் தொடர்பு இருந்துள்ளது.

இந்த மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் சிறைக்குள்ளேயே சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்ட நடிகைகளுக்கும் பணம் செலவழித்தார். நடிகைகளை சிறைக்கும் வரவைத்துள்ளார். இந்த மோசடி வழக்கு, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

சுகேஷ் சந்திரசேகரும், வழக்கில் தொடர்புடைய அவருடைய மனைவி லீனா மரியாவும் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர், சக கைதிகளின் நலன்களுக்காக ரூ.5.11 கோடி தொகையை வழங்க விருப்பம் தெரிவித்து அதுபற்றி சிறை துறை டி.ஜி.பி.க்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.

அதில், ஒரு மனிதராக மற்றும் நல்ல எண்ணங்களுடன், அன்புக்கு உரியவர்களிடம் இருந்து விலகியுள்ள அதே சூழலில், சக கைதிகளின் நலன்களுக்காக ரூ.5.11 கோடிக்கான வரைவோலையை ஏற்று கொள்ளும்படி பணிவுடன் நான் கேட்டு கொள்கிறேன்.

வருகிற 25-ந்தேதி எனது பிறந்த தினத்தில் இந்த தொகையை ஏற்று கொண்டால், அதிக மகிழ்ச்சி அடைவேன். அது எனக்கான சிறந்த பரிசாக இருக்கும்.

இதுபோன்ற விசயத்தில் சந்தேகமேயின்றி நீதிமன்றம் பல முயற்சிகளை எடுத்து உள்ளது. ஆனால், வறுமை நிலைக்கு கீழே உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவது என்ற விசயம் இதுவரை தொடங்கப்படாத மற்றும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

பல ஆண்டுகளாக தங்களது அன்புக்கு உரியவர்கள், சிறையில் அடைப்பட்டிருக்கும் விரக்தியில், மனமுடைந்து பல குடும்பங்கள் தற்கொலை செய்தவற்றையும் கடந்து போன ஆண்டுகளில் நான் பார்த்து இருக்கிறேன்.

எனது தனிப்பட்ட வருவாயில் உள்ள நிதியில் இருந்து இந்த சிறிய அளவிலான தொகையை வழங்குவதற்கும், இந்த சிறிய நிகழ்வை தொடங்கி வைக்கவும் நான் விரும்புகிறேன்.

இதனை உங்களது நன்மையான அலுவலகம் ஏற்கும் பட்சத்தில், எனது சட்ட குழுவினர் முறைப்படியான இந்த தொகையை ஆவண சான்றுகளுடன் அளிப்பதற்கான, சட்ட விசயங்களை மேற்கொள்வார்கள்.

இந்த தொகையானது, 100 சதவீதம் சட்டப்படி எனது சம்பாத்தியத்தில் வந்தவை என்றும் மற்றும் எந்தவித குற்ற விசயங்களில் இருந்து வந்தவை அல்ல என்றும் அவர் கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.


Next Story