இப்படியும் நடக்குமா...? ஒடிசாவில் மற்றொரு துயரம்... நின்றிருந்த சரக்கு ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து 6 பேர் பலி


இப்படியும் நடக்குமா...? ஒடிசாவில் மற்றொரு துயரம்... நின்றிருந்த சரக்கு ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து 6 பேர் பலி
x

ஒடிசாவில் 275 பேரை பலி கொண்ட ரெயில் விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், மற்றொரு துயர சம்பவம் நடந்து உள்ளது.

ஜஜ்பூர்,

ஒடிசாவின் ஜஜ்பூர் சாலை பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்தில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில், ரெயில் என்ஜின் இல்லை.

இந்த நிலையில், ஜஜ்பூர் கியோஞ்சர் சாலை பகுதியருகே ரெயில்வே பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் சில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, இடி இடிக்கிறது என்பதற்காக சரக்கு ரெயில் பெட்டியருகே சென்று தொழிலாளர்கள் ஒதுங்கி உள்ளனர். இந்நிலையில் ரெயில் பெட்டிகள் அவர்கள் மீது உருண்டு விழுந்ததில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில், ஜஜ்பூர் கியோஞ்சர் சாலையருகே பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, என்ஜின் இல்லாத சரக்கு ரெயிலின் பெட்டிகள், இடி இடித்ததில் உருண்டுள்ளன என தெரிவித்து உள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஹவுரா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இதே ஜஜ்பூர் கியோஞ்சர் பகுதியில் வந்தபோது ரெயிலின் 14 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 161 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி ரெயில்வே உயர்மட்ட விசாரணையை நடத்தியது. எனினும், விபத்திற்கான சரியான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கடந்த 2-ந்தேதி 3 ரெயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதில் 275 பயணிகள் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Next Story