'காங்கிரஸ் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை ராகுல் காந்தி திருப்பி கொடுப்பாரா?' - தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி
காங்கிரஸ் கட்சி யாரை மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்றது? என தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானேவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசடி திட்டம் என்றும், இந்த திட்டம் எதிர்க்கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும், அரசியல் கட்சிகளை உடைப்பதற்கும் பயன்பட்டது என்றும் விமர்சித்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க. 303 எம்.பி.க்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சி என்பதால், மொத்த தேர்தல் பத்திரங்களில் 30 சதவீதம் எங்களுக்கு கிடைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 70 சதவீத பத்திரங்களைப் பெற்றன. காங்கிரஸ் பெற்ற தேர்தல் பத்திரங்களை ராகுல் காந்தி திருப்பி கொடுப்பாரா? அவர்கள் யாரை மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்றார்கள்?
தேர்தல் பத்திரங்கள் என்பது கணக்கில் வரக்கூடிய பணமாகும். அரசியல் கட்சிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதற்கான கணக்குகள் இருக்கும். இந்த திட்டத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் நீதிமன்றம் அதனை சரி செய்யும்.
காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் கறுப்புப் பணத்திற்கான ஆதாரம் தடை செய்யப்பட்டதால்தான் ராகுல் காந்தி ஆவேசப்படுகிறார். கறுப்புப் பணம் மூலம் தேர்தல் நிதியைப் பெற காங்கிரஸ் விரும்புகிறது."
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.