பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவி தர முன்வந்தாலும் ஒருபோதும் பா.ஜ.க.வில் இணைய மாட்டேன் - சித்தராமையா
மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மைசூரு மாவட்டத்திலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் எம். லட்சுமணனுக்கு வாக்கு கேட்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த எஸ்சி-எஸ்டி செயல்வீரர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டத்தில், கர்நாடகா மாநில முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல்வாதிகளுக்கு கருத்தியல் தெளிவு பெறும்போது அரசியல் அதிகாரம் நம்மை வந்தடையும். மக்கள் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ்.ல் விழுந்து விடக்கூடாது. பட்டியலின மக்கள் மற்றும் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார். தற்போது அவர் நாங்கள் மோடியுடன் பிரிக்கமுடியாத பந்தம் எனக் கூறுகிறார். மேலும், அரசியல்வாதிகளுக்கு கருத்தியல் தெளிவு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சமூக நீதிக்கு எதிரானது. ஆகவே, அவர்கள் எப்போதும் இட ஒதுக்கீட்டை விரும்பியதில்லை.
இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல. அது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமை. சமூகத்தில் ஜாதி முறை இருக்கும்வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். சுதந்திரம் மற்றும் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு, பட்டியலின மக்களான நமக்கு படிக்கும் உரிமை இருந்ததா? பெண்களுக்கு உரிமைகள் உண்டா?.
ஒரு பெண் தன் கணவன் இறந்த உடனேயே தன்னை உயிரோடு எரித்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது. இத்தகைய மனிதாபிமானமற்ற நடைமுறைகள் நமது அரசியல் சாசனத்தால் தடை செய்யப்பட்டன. எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து மனுஸ்மிர்தியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறார்கள். இதை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க. எனக்கு பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவி தர முன்வாந்தாலும் அவர்களுடன் ஒருபோதும் இணைய மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறிவார்.