ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர்


ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர்
x

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 49 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து, 58 தொகுதிகளுக்கு இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அதேவேளை, ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. அதேவேளை, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதன்பின்னர், ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. 83 சட்டசபை தொகுதிகளில் இருந்து 90 தொகுதிகளாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பான எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் கணிசமான வாக்குகள் சதவிதிகம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்கள், பெண்கள் மகிழ்ச்சியுடன் அதிக அளவில் வந்து வாக்களிப்பது தொடர்பான செய்தியை கேட்கும்போது என் காதுகளில் இசை கேட்கிறது. தேர்தலில் மக்கள் பங்களிப்பதன்மூலம் ஜனநாயகத்தின் வேர்கள் மேலும் வலுப்பெறுகின்றன.

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அரசு தேவை. ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் விரைவில் நடத்தப்படும். சட்டசபை தேர்தலை நடத்த ஆர்வமாக உள்ளோம்' இவ்வாறு அவர் கூறினார்.


Next Story