கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி அந்தர் பல்டி அடிப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி


கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி அந்தர் பல்டி அடிப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 1 April 2024 4:46 PM IST (Updated: 1 April 2024 5:45 PM IST)
t-max-icont-min-icon

வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் ஊதுகுழலாக மாறியுள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பா.ஜ.க கடந்த 2 நாட்களாக 1974ம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.

அதன் ஒருபகுதியாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் இந்த விவகாரத்தை அணுகியுள்ளன என்றார். கட்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு இரண்டு கட்சிகளை அவர் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,வின் ஊதுகுழலாக வெளியுறவுத்துறை மந்திரி செயல்படுவதாக முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

கடந்த 2015ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது. தற்போது அந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை மந்திரி அந்தர் பல்டி அடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வெளியுறவுத்துறை அதிகாரியாக பணியாற்றி தற்போது வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இன் ஊதுகுழலாக மாறியுள்ளார். வரலாற்றில் ஜெய்சங்கரின் வாழ்க்கை பதிவு செய்யப்படும் எனவும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதே போல், ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,

கடந்த 50 ஆண்டுகளாக இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பது உண்மைதான். அதேபோன்று பல இலங்கை மீனவர்களையும் இந்தியா கைது செய்துள்ளது. ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது மீனவர்களை விடுவித்துள்ளன.

ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்தபோதும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தபோதும் இது நடந்துள்ளது. காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் எதிராக பேசுவதற்கு ஜெய்சங்கருக்கு என்ன காரணம்?

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா? 2014 முதல் மோடி ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா? என கேள்வி எழுப்பி

அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story