மேற்கு வங்காளம்: மந்திரி பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம் - மம்தா பானர்ஜி


மேற்கு வங்காளம்: மந்திரி பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம் - மம்தா பானர்ஜி
x

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான மேற்கு வங்காள மந்திரி பார்த்தா சாட்டர்ஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்கத்துறையில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 23 ஆம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து, பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக மந்திரி பதவி மற்றும் அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசின் பொது செயலாளர் குணால் கோஷ் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கப்பட்டு உள்ளார். தொழில், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொது நிறுவனங்களின் துறை உள்ளிட்ட துறைகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது.

இது குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டேன். எனது கட்சி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பின்னணியில் பல திட்டங்கள் உள்ளன ஆனால் அவை குறித்த விவரங்களுக்கு செல்ல விரும்பவில்லை இவ்வாறு தெரிவித்தார்.


Next Story