நிலக்கரி ஊழல் வழக்கு: மம்தாபானர்ஜி உறவினர் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை
நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக மம்தாபானர்ஜி உறவினர் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான அபிஷேக் பானர்ஜி. திரிபுரா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் திரிணாமுல் கட்சிக்காக பிரசாரம் செய்ய அவர் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் அபிஷேக்கின் மனைவி ருஜிரா பானர்ஜியிடம், நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.
சி.பி.ஐ. குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட 8 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வருவதற்கு முன்பாக எம்.பி. அபிஷேக்கின் வீட்டுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக ருஜிராவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்துவது இது 2-வது முறையாகும்.
கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் ருஜிரா, அவரது சகோதரி மெனோகா கம்பீர், அவருடைய கணவர், மாமனார் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
'முந்தைய விசாரணையில் ருஜிரா அளித்த பதில்கள் திருப்தி அளிக்காததால், நாங்கள் அவரிடம் மீண்டும் விசாரித்தோம்' என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம், இது மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்காளத்தின் அசான்சோல் அருகே நிலக்கரி வெட்டி எடுப்பதில் ரூ.1,300 கோடி வரை முறைகேடான பணப் பரிமாற்றம் நடந்ததாக சி.பி.ஐ. கூறுகிறது.