கொரோனா பரவலுக்கு ஏற்ற வானிலை; முன்னெச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்


கொரோனா பரவலுக்கு ஏற்ற வானிலை; முன்னெச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்
x

கொரோனா பரவலுக்கு ஏற்ற வானிலை உள்ள சூழலில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தலைநகர் டெல்லி உள்பட பல நகரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதனால், இந்தியாவில் பல மாதங்களுக்கு பின்னர் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. டெல்லியிலும் இந்த எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 400-க்கு உயர்ந்துள்ளது.

டெல்லியில் இருமல், குளிர் ஜுரம், காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுபற்றி டெல்லியில் உள்ள பி.எல்.கே. மருத்துவமனையின் நெஞ்சு மற்றும் சுவாச துறைக்கான இயக்குனர், மருத்துவர் சந்தீப் நய்யார் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாள்தோறும் வெளிநோயாளிகள் பிரிவில் இருமல், ஜுரம், காய்ச்சல் மற்றும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அவர்களில் பலர், தங்களுக்கு கடந்த சில நாட்களாக இதுபோன்ற பாதிப்பு உள்ளது என கூறுகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. தொற்று உறுதியானால், அவர்களை உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்துகிறோம்.

எனினும், சிலரை மருத்துவமனையில் சேரும்படி கூறுகிறோம் என கூறியுள்ளார். பலரும் வீட்டில் இருந்தபடி குணமடைந்து வருகின்றனர். ஆன்லைன் வழியேயும் பலர் மருத்துவ ஆலோசனைகளை பெற்று வருகின்றனர் என கூறியுள்ளார்.

நீண்டகால இருமல் இருக்கிறது என்றால் அதுபற்றி மருத்துவரை கலந்து ஆலோசனை மேற்கொள்ளவும். அலட்சியம் வேண்டாம் என அவர் தெரிவித்து உள்ளார்.

எந்தவொரு வைரஸ் பரவலோ அல்லது தொற்றோ ஏற்படுவதற்கான சாதகம் வாய்ந்த வானிலை தற்போது காணப்படுகிறது. அதனாலேயே வெவ்வேறு தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் உயர்ந்து காணப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக மக்கள் முக கவசங்கள் அணியாமல் அதனை நிறுத்தி விட்டனர். இதுவும் பாதிப்பு அதிகரிப்புக்கான காரணங்களில் ஒன்று என கூறியுள்ளார்.

அதனால், இந்த சூழலில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதேபோன்று, மத்திய சுகாதார மந்திரியான டாக்டர் மன்சுக் மாண்டவியா, பொதுமக்கள் தற்போதுள்ள கொரோனா பரவலான சூழலில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.


Next Story