'பஞ்சாப், சண்டிகரில் 14 தொகுதிகளுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர்களை விரைவில் அறிவிப்போம்' - கெஜ்ரிவால்
பஞ்சாபில் 13 தொகுதிகள் மற்றும் சண்டிகர் தொகுதி ஆகியவற்றிற்கான வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்,
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பஞ்சாப் மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளில் விநியோகம் செய்யும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கம் கடந்த 2 ஆண்டுகளில் நிறைய பணிகளைச் செய்துள்ளது. ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியோ, அகாலி தளம் கட்சியோ என்ன பணிகளைச் செய்தார்கள் என்று கேட்டால் உங்களுக்கு நினைவு இருக்காது.
ஆம் ஆத்மி கட்சிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் உங்கள் ஆசிகளை வழங்கினீர்கள். மொத்தம் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் 92 தொகுதிகளை எங்களுக்குக் கொடுத்து வரலாறு படைத்தீர்கள்.
இன்று நான் மீண்டும் உங்கள் ஆசீர்வாதத்தை நாடுகிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. பஞ்சாபில் 13 மக்களவை தொகுதிகள் மற்றும் சண்டிகர் தொகுதி என மொத்தம் 14 தொகுதிகள் உள்ளன.
அடுத்த 10 முதல் 15 நாட்களில், இந்த 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எங்களை ஆசீர்வதித்ததைப் போல், இந்த 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.