400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற பா.ஜனதா முழக்கத்தால் தோல்வி அடைந்தோம்: மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே பேச்சு


400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற பா.ஜனதா முழக்கத்தால் தோல்வி அடைந்தோம்:  மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே  பேச்சு
x

400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பா.ஜனதாவின் முழக்கத்தால் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்று மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும், இதில் பா.ஜனதா மட்டும் 370 இடங்களில் வெற்றி பெறும் என்ற முழக்கத்தை பா.ஜனதா முன்வைத்தது. ஆனால் அந்த இலக்கை தேசிய ஜனநாயக கூட்டணியால் அடைய முடியவில்லை.

குறிப்பாக பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் மோடி ஆட்சியமைத்து உள்ளார்.

இந்தநிலையில் மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதா கூட்டணி தோல்விக்கான காரணம் குறித்து பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் கடுமையாக உழைத்தார். தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதா முழங்கியது. இந்த பிரசாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் தவறாக கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர்.

அதுமட்டும் இன்றி பா.ஜனதா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும், இடஒதுக்கீடு நீக்கப்படும் என்ற பயம் மக்களிடமும் ஏற்பட்டது. இதுவே தேர்தலில் நாங்கள் சில இடங்களை இழக்க காரணமாக அமைந்தது. மராட்டியத்திலும் நாங்கள் இழப்பை சந்திக்க நேர்ந்தது. பா.ஜனதாவின் 400 'பிளஸ்' முழக்கம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

இவ்வாறு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசினார்.


Next Story