'விண்வெளி துறையில் நமக்கான சொந்த திட்டங்கள் நம்மிடம் உள்ளன' - இஸ்ரோ தலைவர் சோம்நாத்


விண்வெளி துறையில் நமக்கான சொந்த திட்டங்கள் நம்மிடம் உள்ளன - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
x

விண்வெளி துறையில் நாம் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக இருக்கிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கலாம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியாவுக்கான உள்நாட்டுத் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;-

"நமது ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் நமது விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் மூலம் நாட்டின் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த துறைகளுக்கு தேவையான உள்நாட்டு உற்பத்தி திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதை நாம் நிறைவேற்றியுள்ளோம்.

இன்று நாம் விண்வெளி துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக இருக்கிறோம். மேலும் விண்வெளி துறையில் நமக்கான சொந்த திட்டங்களும், அவற்றை செயல்படுத்தும் வழிகளும் நம்மிடம் உள்ளன. அதுதான் இன்று நம்மிடம் இருக்கும் சக்தி.

விண்வெளித் துறையின் வளர்ச்சியால் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் பயனடைந்து வருகின்றனர். விண்வெளித் துறையில் ஏற்படும் வளர்ச்சி பொருளாதார நடவடிக்கைகளை விரிவடையைச் செய்யும். அத்தகைய மாற்றம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது."

இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார்.


Next Story