புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மூலம் விரைவாக நீதி கிடைக்கும் - அமித்ஷா பேட்டி
கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்துச் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த புதிய சட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இந்த சட்டங்களுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு அரசிதழில் கடந்த டிசம்பரில் வெளியானது.
இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி புதிய சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் சுமார் 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமாா் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளித்து தயாா்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
✦ அரசியலமைப்பு சட்டதிற்கு ஏற்ப புதிய குற்றவியல் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மூலம் விரைவாக நீதி கிடைக்கும்
✦ கூட்டுப்பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
✦ புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார்தாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
✦ தண்டனை வழங்குவது மட்டுமல்ல, நீதியை நிலைநாட்டவும், இந்த திருத்த சட்டங்கள் உதவும்.
✦ புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்க முன்னுரிமை தரப்பட்டுள்ளது.
✦ பூஜ்ஜிய எப்.ஐ.ஆர். முறை மூலம் காவல்நிலைய எல்லைப்பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
✦ விசாரணை நடைமுறைகளை இணையவழியில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
✦ புதிய சட்டங்கள் மூலம் பெண்களை குற்றங்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
✦ தவறான வாக்குறுதி கொடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தனி குற்றம் வரையறுக்கப்பட்டுள்ளது.
✦ சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
✦ பாதிக்கப்பட்ட பெண்ணிடம் குடும்பத்தினர் முன்னிலையில் பெண் அதிகாரி வாக்குமூலம் பெறுவார்.
✦ புதிய சட்டம் தொடர்பாக 6 லட்சத்திற்கும் அதிகமான காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
✦ நாடு முழுவதும் அமலாகி உள்ள புதிய சட்டத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
✦ அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப புதிய குற்றவியல் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
✦ புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
✦ புதிய சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது தீர்வல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.