'நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகுவார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்' - மல்லிகார்ஜுன கார்கே
நிதிஷ் குமார் வெளியேறுவார் என்பது லாலு பிரசாத் யாதவ் மூலம் ஏற்கனவே தெரிய வந்ததாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
பெங்களூரு,
பீகார் மாநில முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ் குமார், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார் மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாகவும், தொடர்ந்து பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் இன்று மாலையே மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 'நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகுவார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக மாநிலம் கலபுராகியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்பியிருந்தால் இருந்திருப்பார். ஆனால் அவர் போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். முன்னதாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் பேசியபோது, நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளார் என்று சொன்னார்கள்.
எனவே நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகுவார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் தவறான தகவல் பரவி விடக் கூடாது என்பதால் நாங்கள் எதையும் சொல்லவில்லை. இன்று அந்த தகவல் உண்மையாகியுள்ளது."
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.