வசிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது - அரவிந்த் கெஜ்ரிவால்
வசிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் தண்ணீர் உற்பத்தி தொடங்கியது என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி,
வடஇந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. டெல்லியில் பெய்த கனமழையினால் யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரித்தது. டெல்லியில் மழை குறைந்த பிறகும் யமுனை நதியில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர்மட்டம் 208.46 மீட்டரை தாண்டியுள்ளது.
கடந்த வியாழன்கிழமை இதனால் வசிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக சில பகுதிகளில் தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. யமுனை நீர்மட்டம் குறைந்தவுடன் இந்த ஆலைகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் வெள்ளத்தினால் மூடப்பட்ட வசிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையம் 54 எம்ஜிடி தண்ணீரை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் 134 எம்ஜிடி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. விரைவில் முழு கொள்ளளவில் தண்ணீர் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்டில், "டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள உபகரணங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. வசிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு 134 எம்ஜிடி ஆகும். இது 54 எம்ஜிடி உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. விரைவில் முழு கொள்ளளவில் தண்ணீர் உற்பத்தி தொடங்கும். இதற்காக பொறியாளர்கள் 24 மணி நேரமும் வேலை செய்து வருகின்றனர்."
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வழக்கம்போல் தண்ணீர் உற்பத்தி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.