வயநாடு நிலச்சரிவு: 130 பேர் மாயம்; கேரள மந்திரி பேட்டி


வயநாடு நிலச்சரிவு:  130 பேர் மாயம்; கேரள மந்திரி பேட்டி
x

கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை கண்டறிய தேடுதல் பணியில் இன்று 2 ஆயிரம் பேர் ஈடுபட்டனர் என மந்திரி கூறியுள்ளார்.

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

நிலச்சரிவில் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வயநாட்டில் 3 உடல் பாகங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 130 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதுபற்றி கேரள மந்திரி பி.ஏ. முகமது ரியாஸ் அளித்த பேட்டியின்போது, இதுவரை 178 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. 51 உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன. 130 பேர் காணாமல் போயுள்ளனர். தேடுதல் குழுவினர், உடல் அல்லது உடல் பாகங்களை தேடி கண்டறியும் முயற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்று 3 உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. பிரேத பரிசோதனைக்கு பின்னரே, அவை மனிதன் அல்லது விலங்கு இவற்றில் யாருடைய உடல்? என உறுதி செய்ய முடியும் என்று ரியாஸ் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, 2 ஆயிரம் பேர் இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சாலியார் ஆற்றில் நாளையும், நாளை மறுநாளும் விரிவான தேடுதல் பணி நடைபெறும் என்று கூறியுள்ளார்.


Next Story