திரைப்படங்களில் அதிகரித்து வரும் வன்முறை காட்சிகள் - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேச்சு
வன்முறை காட்சிகளால் இளைஞர்கள் தவறான வழிகளில் செல்வதாக அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதா மீதான விதாதத்தின் போது பேசிய அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, தானும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவன் என்றும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகம் செய்திருப்பதாகவும் கூறினார்.
திரைப்படங்களில் தற்போது வன்முறை, கொலை என திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கதையம்சத்தில் திரைப்படங்கள் எடுக்கப்படுவதாக தம்பிதுரை எம்.பி. குற்றம் சாட்டினார். இது போன்ற காட்சிகள் திமிர் குணத்தை ஊக்குவிப்பதாகவும், இதனால் இளைஞர்கள் தவறான வழிகளில் செல்வதாகவும் அவர் கூறினார்.
எனவே இது தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்றும், தணிக்கை வாரியம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தினார்.