நாடு முழுவதும் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்


நாடு முழுவதும் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
x

மத்திய அரசு பணிகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நேற்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு பணிகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை சேர்க்க வேண்டும் எனவும் அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நேற்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அனைத்து துறை அமைச்சகங்களில் ஆட்கள் தேவை குறித்து பிரதமர் மோடி மதிப்பு ஆய்வு செய்தார்.ஆய்வுக்கு பிறகு உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயாக்கள், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் பிற துறைகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை விரைவில் நிரப்ப கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில், "அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு அமைச்சகங்களும் அந்தந்த துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்புவதற்கு உறுதிபூண்டுள்ளன.

அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் 10 லட்சம் பேரை நியமிக்கும் பிரதமரின் முடிவை முன்னெடுத்துச் செல்வதே இதன் நோக்கம்" என்று கூறினார்.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், மாநிலங்களையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் 6,558 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 15,227 ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்கள் காலியாக இருப்பதாக பிரதான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story