ஞானவாபி மசூதிக்கு துணை ராணுவம் பாதுகாப்பு
வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
வாரணாசி,
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே அங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
அதைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கையில், மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்னர் இந்து கோவில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி கோர்ட்டு அனுமதி வழங்கியது. மேலும் இந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய ஒரு வாரத்துக்குள் தேவையான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினர் குவிப்பால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.