வரதட்சணை கேட்டு கொடுமை: மாமியார் கட்டாயப்படுத்தியதால் ஆசிட் குடித்த மருமகள் உயிரிழப்பு


வரதட்சணை கேட்டு கொடுமை: மாமியார் கட்டாயப்படுத்தியதால் ஆசிட் குடித்த மருமகள் உயிரிழப்பு
x

வரதட்சணை கேட்டு கொடுமை செய்த மாமியார் கட்டாயப்படுத்தியதால் ஆசிட் குடித்த மருமகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரேலி,

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த மாமியார் கட்டாயப்படுத்தியதால் ஆசிட் குடித்த மருமகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பித்ரி செயின்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள உதலா ஜாகிர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உடலா ஜாகிர் கிராமத்தைச் சேர்ந்தவர் இலியாஸ். இவருக்கும் அஞ்சும் என்ற பெண்ணுக்கும் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்ற அஞ்சும், மாமியார் வீட்டில் வரதட்சணையாக ரூ.2.50 லட்சம் ரொக்கம் மற்றும் கார் கேட்டு துன்புறுத்துவதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அஞ்சும் தனது மாமியார் வீட்டிற்கு திரும்பினார்.

இந்த நிலையில் அவரது மாமியார் கட்டாயப்படுத்தியதால் ஆசிட் குடித்த அஞ்சும் பிப்ரவரி 21 அன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது, அஞ்சும் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அஞ்சும், மாஜிஸ்திரேட் முன்பு மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். அப்போது மாமியார் வீட்டில் வரதட்சணையாக ரூ.2.50 லட்சம் ரொக்கம் மற்றும் கார் கேட்டனர் என்றும் பெற்றோர்கள் அந்த கோரிக்கையை நிறைவேற்றத் தவறியதால், மாமியார் தன்னை ஆசிட் குடிக்க வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் மற்றும் மாமியார் மீது நவாப்கஞ்ச் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்ஐஆர் பித்ரி செயின்பூருக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரேலி (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் அகர்வால் கூறுகையில், இது ஒரு தீவிரமான விஷயம் என்றும், நவாப்கஞ்ச் மற்றும் பித்ரி செயின்பூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.


Next Story