சபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி - பினராயி விஜயன் தகவல்


சபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி -  பினராயி விஜயன் தகவல்
x

FILEPIC

சபரிமலை பெருவழிபாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை,

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

நடப்பு சபரிமலை சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தரமான அப்பம், அரவணை பிரசாதம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். கூட்டம் அதிகமாகும் நாட்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்படும்.

பாரம்பரிய காட்டு வழி நடை பாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நிலக்கல் மற்றும் எருமேலியில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய கூடுதல் வசதி செய்யப்படும். சபரிமலை செல்லும் சாலைகள், பார்க்கிங் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story