உ.பி.: கொரோனா காலத்தில் வசூலித்த 15% பள்ளி கட்டண தொகையை திருப்பி தர ஐகோர்ட்டு உத்தரவு


உ.பி.:  கொரோனா காலத்தில் வசூலித்த 15% பள்ளி கட்டண தொகையை திருப்பி தர ஐகோர்ட்டு உத்தரவு
x

உத்தர பிரதேசத்தில் கொரோனா காலத்தில் வசூலித்த மொத்த கட்டணத்தில் 15 சதவீத தொகையை திருப்பி தரும்படி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


அலகாபாத்,


இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பெருந்தொற்று அலையாக பரவியது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, அதனை உடனடியாக அமல்படுத்தியது.

இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. ரெயில், விமானம் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் முடங்கின.

எனினும், சில பள்ளிகள் முழு கட்டண தொகையை மாணவர்களிடம் இருந்து பெற்றன. இதற்கு பெற்றோர் இடையே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களில் முழு பள்ளி கட்டணமும் செலுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் அலகாபாத் ஐகோர்ட்டில் பெற்றோர் சிலர் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், 2020-2021-ம் ஆண்டில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழி கல்வி தவிர்த்து வேறு எந்த சேவையையும் மாணவ மாணவிகளுக்கு வழங்கவில்லை.

அதனால், படிப்பு கட்டணம் தவிர்த்து வாங்க கூடிய ஒரு ரூபாய் பணம் கூட, லாப நோக்கு மற்றும் கல்வியை வர்த்தக மயம் ஆக்குவது தவிர்த்து வேறு எதுவும் கிடையாது என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதனை, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள இந்தியன் பள்ளிக்கு எதிராக, எந்த சேவையையும் தராமல் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த வலியுறுத்துவது என்பது லாப நோக்கிலானது, கல்வியை வர்த்தகம் ஆக்குவது என்ற சமீபத்திய சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பினையும் சுட்டி காட்டி மனுதாரர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து, பெற்றோரின் மனுவை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் நீதிபதி ஜே.ஜே. முனீர் தலைமையிலான அமர்வு, உத்தர பிரதேசத்தில் 2020-21 காலகட்டத்தில் கொரோனா பரவலின்போது, மாணவர்களிடம் வசூலித்த மொத்த கட்டணத்தில் 15 சதவீத தொகையை அனைத்து தனியார் பள்ளிகளும் திருப்பி தரும்படி உத்தரவிட்டு உள்ளனர்.

இதேபோன்று, பள்ளியை விட்டு விலகி சென்ற மாணவர்களுக்கும் இந்த 15 சதவீத தொகையை திருப்பி தரவேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டு உள்ளது.

இதனை அடுத்த பருவத்தில் சரி செய்து கொள்ளும்படியும், 2 மாதங்களில் இந்த நடைமுறையை பூர்த்தி செய்யும்படியும் பள்ளிகளுக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

1 More update

Next Story