அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மர்ம மரணம்


UP policeman dies at Ayodhya Ram temple
x

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் உயிரிழந்தார்.

அயோத்தி:

அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில், காவல் துறையின் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், கோட்டேஷ்வர் கோவிலுக்கு எதிரே உள்ள வி.ஐ.பி. கேட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் சத்ருகன் விஷ்வகர்மா (வயது 25) இன்று அதிகாலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சர்வீஸ் துப்பாக்கியில் இருந்த தோட்டா பாய்ந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ராமர் கோவில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கான்ஸ்டபிள் இறந்த இடத்தில் இருந்து வெறும் 150 மீட்டர் தொலைவில் ராமர் கோவிலின் கருவறை உள்ளது.

கான்ஸ்டபிள் சத்ருகன் விஷ்வகர்மா தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தாரா? அல்லது துப்பாக்கியில் தவறுதலாக கை பட்டு தோட்டா பாய்ந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஐ.ஜி. பிரவீன் குமார் தெரிவித்தார்.

இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி ராமஜென்ம பூமியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாகாண ஆயுதப்படை காவலர் ஒருவர், அவரது சர்வீஸ் துப்பாக்கியின் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் இறந்தார்.


Next Story