உ.பி.: கான்பூரில் பல பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கான்பூர்,
டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் கடந்த 2 வாரங்களாக அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் இடையே பரவலாக அச்சம் எழுந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்ஜ்வார் மருத்துவமனை மற்றும் தீப் சந்திரா பந்து மருத்துவமனை என 4 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் வழியே நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
கடந்த ஞாயிற்று கிழமை (மே 12) டெல்லியில் உள்ள 20 மருத்துவமனைகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்தன. இதே நாளில், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும் மிரட்டல் செய்தி வந்தது. எனினும், இவை அனைத்தும் புரளி என பின்னர் தெரிய வந்தது.
கடந்த 1-ந்தேதி டெல்லியில் உள்ள 100 பள்ளிகள், நொய்டா நகரில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒரு பள்ளி ஆகியவற்றிற்கு மிரட்டல்கள் விடப்பட்டன. ரஷிய இ-மெயில் சேவையை பயன்படுத்தி இந்த மிரட்டல்கள் விடப்பட்டு இருந்தன.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் உள்ள 37 பள்ளிகளுக்கும் இதேபோன்ற மிரட்டல்கள் விடப்பட்டு இருந்தன. உடனடியாக, வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படை, வெடிகுண்டு கண்டறியும் குழு, தீயணைப்பு துறை மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். எனினும், இதுபற்றி நடந்த சோதனையில், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், நேற்று மதியம் டெல்லியில் முக்கிய அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு பிரமுகர்கள் அடைக்கப்பட்டு உள்ள திகார் சிறைக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்திருந்தது. இதனால், சிறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. கடந்த 1-ந்தேதியில் இருந்து இதுவரை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் முக்கிய பகுதிகளில் இதுபோன்ற அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கான்பூர் வெடிகுண்டு மிரட்டல் பற்றி காவல் துறையின் இணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஹரீஷ் சந்தர் கூறும்போது, பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுபற்றி இணையதள குற்றங்களுக்கான பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த அச்சுறுத்தலுக்கும், இதற்கு முன் பல்வேறு பள்ளிகள், விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விடப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றி, சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கொண்டு முழு அளவில் கண்காணிக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. அதனால், பதற்ற சூழலை விளைவிக்க வேண்டாம் என்று பெற்றோரையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இந்த விவகாரம் பற்றி நாங்கள் உங்களை அணுகுவோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த முறையும் ரஷிய செர்வரில் இருந்து இ-மெயில்கள் வந்துள்ளன என கண்டறியப்பட்டு உள்ளது. கல்வி நிலையங்களில் பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்த முயன்றபோதும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் அதிமுக்கிய முன்னுரிமையை கல்வி நிலையங்கள் வழங்கி வருகின்றன.