பல்கலைக்கழக மசோதா விவகாரம்: கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது- கேரள கவர்னர் விளக்கம்
பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என கேரள கவர்னர் கூறியுள்ளார்.
கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் வகையில், மசோதா ஒன்றை அரசு அறிமுகம் செயதுள்ளது. இந்த விவகாரத்தில் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தெரிவித்து உள்ளது. அப்படியிருக்க இந்த பிரச்சினையில் அவர்கள் (மாநில அரசு) எப்படி தலையிட முடியும்?' என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், 'தங்களால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அது பொது பட்டியலில் உள்ளது. பல்கலைக்கழகங்களின் மீதான தனி அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எப்படி ஒருதலைப்பட்சமாக ஏதாவது செய்ய முடியும்?' என்றும் வினவினார்.