சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறைப்பு - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அனைத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 200 குறைக்கப்படுகிறது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையில் 400 ரூபாய் குறைக்கப்படுகிறது.
ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார்.
மேலும் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை பாராட்டி, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் 3 திட்டம் வெறும் வெற்றி அல்ல; தேசத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளம் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.