பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் திருப்பம்; வினீத் கோயலை நீக்க முடிவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு


பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் திருப்பம்; வினீத் கோயலை நீக்க முடிவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு
x

பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு போராடி வரும் டாக்டர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு முன், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய விவகாரங்களில் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில், மருத்துவர்களின் பொதுக்குழு கூட்டத்தின்போது, அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலான தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர் கோயல், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களில் கூறப்பட்டு இருந்தன.

இதேபோன்று, சுகாதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைத்தனர்.

ஆனால் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், மேற்கு வங்காள இளநிலை டாக்டர்கள் அமைப்பு மற்றும் பயிற்சி டாக்டர்களின் கூட்டமைப்பு நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது. அப்போது அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதில், கொல்கத்தா காவல் ஆணையாளர் வினீத் கோயல் மற்றும் மம்தா பானர்ஜி அரசில் உள்ள சுகாதார மற்றும் குடும்பநல துறையில் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 5 தீர்மானங்களையும் அவர்கள் முக்கிய கோரிக்கைகளாக குறிப்பிட்டனர்.

குற்ற சம்பவம் நடந்த பகுதியில், அதனை பாதுகாப்பு பகுதியாக கொண்டு வராமல், உடனடியாக கட்டுமான பணி நடைபெறும் உத்தரவொன்றில் கையெழுத்திட்ட உயரதிகாரிகளான மருத்துவ கல்வியின் இயக்குநர், சுகாதார சேவையின் இயக்குநர் மற்றும் மேற்கு வங்காள அரசின் சுகாதார மற்றும் குடும்பநல துறையின் சுகாதார செயலாளர் ஆகியோர் நீக்கப்பட வேண்டும். சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்ட விசயத்தில் நடந்த மிக பெரிய ஊழலில், அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது என நாங்கள் நினைக்கிறோம்.

சமீபத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் சந்தீப்பை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. அதனால், இந்த குற்ற சம்பவத்தில் அவருக்கு தீவிர தொடர்பு உள்ளது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

டாக்டர்களின் கோரிக்கைகளில், முதல்-மந்திரியுடனான பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனினும், அதனை ஏற்க அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சூழலில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்றிரவு பேசும்போது, டாக்டர்களின் கோரிக்கையை கவனிக்க முயற்சித்தோம். இதில், கொல்கத்தா காவல் ஆணையாளரை பதவியில் இருந்து நீக்குவது என முடிவு செய்துள்ளோம். அவர் ராஜினாமா செய்ய ஒப்பு கொண்டு விட்டார். அதனால், இன்று மாலை 4 மணியளவில் புதிய காவல் ஆணையாளரிடம் தன்னுடைய பொறுப்புகளை அவர் ஒப்படைப்பார். சுகாதார துறையில் 3 பேரை நீக்க டாக்டர்கள் கோரியுள்ளனர். இதில் 2 பேரை நீக்க நாங்கள் ஒப்பு கொண்டிருக்கிறோம் என்றார்.

இதனால், டாக்டர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம் என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், அவர்களுக்கு நாங்கள் 99 சதவீதம் சம்மதம் தெரிவித்து விட்டோம். இனியும் நாங்கள் என்ன செய்ய முடியும்? பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, காவல் துணை ஆணையாளர் வடக்கு (அபிசேக் குப்தா) நீக்கப்படுவார். புதிய கொல்கத்தா காவல் ஆணையாளர் பற்றி முடிவு செய்யப்படும். இவை தவிர்த்து, டாக்டர்களின் பாதுகாப்புக்கு முழு கவனமும் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.


Next Story