தெலுங்கானாவில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து பா.ஜ.க.வுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்க ரூ.100 கோடி பேரம் பேசிய வழக்கில், கைதான 3 பேரையும் காவலில் வைக்க மறுத்து கோர்ட்டு விடுவித்தது.
ஐதராபாத்,
முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிற தெலுங்கானாவில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.
இந்த நிலையில் அங்கு பா.ஜ.க. தனது வலிமையை பெருக்கும் நோக்கத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கு ரூ.100 கோடி தருவதாகக்கூறி, தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரம் பேசப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலராஜு, ஹர்ஷவர்த்தன் ரெட்டி, காந்தாராவ், ரோகித் ரெட்டி ஆவார்கள்.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டியின் புகாரின்பேரில், இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 120-பி (குற்றச்சதி), 171-பி உடன் இணைந்த 171(இ) (லஞ்சம்), 506 உடன் இணைந்த பிரிவு 34 (பலர் இணைந்து குற்ற மிரட்டல்) மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 8-ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பா.ஜ.க.வின் ஏஜெண்டுகளாக செயல்பட்டதாக கூறப்படும் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி என்ற சதீஷ்சர்மா, ஐதராபாத்தின் நந்தகுமார், திருப்பதியின் சிம்மயாஜி சுவாமி ஆகிய 3 பேரையும், ஐதராபாத் புறநகர் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்து புதன்கிழமை இரவில் போலீசார் கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் அவர்கள் ஐதராபாத்தில் சரூர்நகரில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டு நீதிபதி வீட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் போலீசார் விடுத்த காவல் வேண்டுகோளின்படி, கைதான 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மறுத்து விட்டார். இந்த வழக்கில் லஞ்சப்பணத்துக்கு ஆதாரம் இல்லை என்பதால் அது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வராது என கூறினார்.
இதையடுத்து அவர்களை போலீசார் விடுவித்தனர். ஆனால் அதற்கு முன்பாக, 3 பேரும் வழக்கின் புலனாய்வு அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டும் என்று கூறுகிற குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 41-ன் கீழ் ஆஜராவதற்கான நோட்டீஸ்களை போலீசார் வழங்கினர்.
இருப்பினும் இந்த வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் வைக்க மறுத்து நீதிபதி விடுவித்திருப்பது இந்த வழக்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டில் சைபராபாத் போலீசார் 'ரிட்' வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்து, கைதான 3 பேரையும் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
பா.ஜ.க. தரப்பிலும் ஐகோர்ட்டில் ஒரு 'ரிட்' வழக்கு தாக்கலாகி உள்ளது. அந்த வழக்கில், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது ஐகோர்ட்டு நீதிபதி அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது.