பச்சை சிக்னலுக்கு பின் பயணம்; அதிவேகம் இல்லை: காயமடைந்த ரெயில் ஓட்டுனர்


பச்சை சிக்னலுக்கு பின் பயணம்; அதிவேகம் இல்லை: காயமடைந்த ரெயில் ஓட்டுனர்
x

ஒடிசா ரெயில் விபத்தில், சரக்கு ரெயில் தடம் புரளவில்லை என்றும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கே அதிக பாதிப்பு உள்ளிட்ட விவரங்களை ரெயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது.

பாலசோர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு வருகின்றன. காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிந்து, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. வருகிற புதன்கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்து, ரெயில்களை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

விபத்துபற்றி ரெயில்வே வாரியத்தின் இயக்கம் மற்றும் வர்த்தக வளர்ச்சி துறைக்கான உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா கூறும்போது, பாதுகாப்பே ரெயில்வேயின் முன்னுரிமை வாய்ந்த விசயம். சான்றுகள் அழிந்து விடாமல் இருக்கின்றன என நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம். எந்த சாட்சியும் பாதிக்கப்படவில்லை என்றும் உறுதி செய்து உள்ளோம்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ரெயில் ஓட்டுனர் கூறும்போது, பச்சை சிக்னல் கிடைத்த பின்பே ரெயில் முன்னேறி சென்றது. எந்த சிக்னலையும் மீறி செல்லவில்லை என்றும் அதிவேகத்திலும் பயணிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளார்.

முதல்கட்ட ஆய்வின்படி, சிக்னல் விசயத்தில் சில பிரச்சனைகள் இருந்து உள்ளன. ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளரின் விரிவான அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலே விபத்தில் சிக்கி உள்ளது. மணிக்கு 128 கி.மீ. வேகத்தில் சென்று உள்ளது. இந்த விபத்தில், சரக்கு ரெயில் தடம் புரளவில்லை. அதில் இரும்பு தாதுக்கள் இருந்து உள்ளன. அதற்கு அதிக பாதிப்பு இல்லை.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கே அதிக பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதனாலேயே அதிக உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட காரணம் என அவர் விளக்கம் தெரிவித்து உள்ளார்.


Next Story