அசாமில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


அசாமில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Jan 2024 5:34 AM IST (Updated: 6 Jan 2024 5:57 AM IST)
t-max-icont-min-icon

போங்கைகானில், டிரைவர்கள் பலர் தங்கள் லைசென்சுகளை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கவுகாத்தி,

சாலை விபத்துக்கு காரணமாகும் லாரி, டேங்கர் லாரி உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்கள், விபத்துப்பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டால் அவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய தண்டனை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி வரை போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை 5 மணி முதல் மாநிலம் முழுவதும் பள்ளி பஸ்கள், வாடகை கார்கள் உள்பட அனைத்து வாணிக வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. தலைநகர் கவுகாத்தி, டின்சுகியா, தேஜ்பூர், கோஹ்பூர், பிஜினி மற்றும் போங்கைகான் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

போங்கைகானில், டிரைவர்கள் பலர் தங்கள் லைசென்சுகளை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதனிடையே அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (சனிக்கிழமை) காலை 5 மணியுடன் முடித்துக்கொள்வதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


Next Story