காஷ்மீரில் டிரைவர் இல்லாமல் ரெயில் ஓடிய விவகாரம் - இன்ஜின் டிரைவர் பணிநீக்கம்
இன்ஜின் டிரைவர் சந்தீப் குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள கத்துவா ரெயில் நிலையத்தில், கடந்த 25-ந்தேதி இன்ஜின் டிரைவர் ஹேண்ட் பிரேக் போடாமல் இறங்கியதால் சரக்கு ரெயில் ஒன்று தானாக ஓடியது. இந்த ரெயில் 8 ரெயில் நிலையங்களை கடந்து சுமார் 70 கி.மீ. தூரம் வரை சென்றது. பின்னர் உச்சி பாசி என்ற பகுதியில் மணல் மூட்டைகள், கட்டைகள் போன்ற தடுப்புகளை வைத்து ரெயில் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த சம்பவம் தொடர்பாக இன்ஜின் டிரைவர் உட்பட 6 பேரை வடக்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. தொடர்ந்து இது குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட இன்ஜின் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்ஜின் டிரைவர் சந்தீப் குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வடக்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "லோகோ பைலட் சந்தீப் குமார் தனது கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். ரெயில்வே விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், ரெயில் இன்ஜினை நிறுத்துவதற்கு முறையற்ற வழிமுறைகளை பயன்படுத்தியுள்ளார்.
இதனால் 53 பெட்டிகளைக் கொண்ட ரெயில், பிரோஸ்பூர் பிரிவில் சுமார் 70 கி.மீ. தூரம் வரை சென்றுள்ளது. இது ஒரு பெரிய விபத்தையோ, உயிர் மற்றும் உடமைகளின் சேதத்தையோ ஏற்படுத்தியிருக்கக் கூடும். இந்த சம்பவம் இந்திய ரெயில்வேயின் பாதுகாப்பு குறித்த பிம்பத்திற்கும், குறிப்பாக வடக்கு ரயில்வேக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.