மைசூரு, ஹம்பி சுற்றுலா தலங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் மைசூரு, ஹம்பி சுற்றுலா தலங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் மைசூரு, ஹம்பி சுற்றுலா தலங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
வேலை வாய்ப்புகள்
உலக சுற்றுலா தினத்தையொட்டி கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் 2020-26-ம் ஆண்டுக்கான சுற்றுலா திருத்த கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அந்த திருத்த கொள்கையை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-
கர்நாடகத்திற்கு தற்போது ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 1 கோடியாக அதிகரிக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும்.
சுற்றுலா தலங்கள்
கலபுரகி, பீதர் கோட்டைகள் அற்புதமாக உள்ளன. இது நமது சொத்து. அதை மேம்படுத்தினால் சுற்றுலாத்துறையில் நமக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும். அந்த கோட்டைகளை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். அந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம். நம்மிடம் உள்ள சுற்றுலா திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
சிக்காவி தொகுதியில் தான் கனகதாசர் பிறந்தார். ஆனால் அந்த இடம் மேம்படுத்தப்படவில்லை. அங்கு கனகதாசர் கோட்டை மற்றும் அரண்மனை கட்டப்பட்டுள்ளது. 4டி ஸ்டூடியோவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை செய்ததால் அங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அரசு-தனியார் பங்களிப்பில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அஞ்சனாத்திரி மலை
பேலூர், ஹலேபீடு, மைசூரு பகுதிகள், ஹம்பி சுற்றுலா தலங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். கோவில் சுற்றுலா, இயற்கை காட்சிகள், சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். ஜோக் நீர்வீழ்ச்சி மேம்படுத்தப்படுகிறது. அஞ்சனாத்திரி மலை மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு 600 அறைகள் கொண்ட தங்கும் விடுதி கட்டிடம் கட்டப்படுகிறது. சுற்றுலா வழிகாட்டிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் உயர்த்தப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
விழாவில் சுற்றுலாத்துறை மந்திரி ஆனந்த்சிங், நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.