தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 உள்ள சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 339 மாநில சுங்கச்சாவடிகளாகும்.
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருச்சி கல்லக்குடி, அரியலூர் மணகெதி, வேலூர் வல்லம், திருவண்ணாமலை இனம் கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி ஆகிய சுங்கசாவடிகளில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்கிறது. மேலும் மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.