இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி; ''பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கள்ள உறவு'' என்று மம்தா பானர்ஜி ஆவேசம்


இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி; பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கள்ள உறவு என்று மம்தா பானர்ஜி ஆவேசம்
x

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கள்ள உறவு நிலவியதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

இடைத்தேர்தல்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மந்திரியாக இருந்த சுப்ரதா சஹா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.அதனால், அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதிக்கு கடந்த 27-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேபாஷிஷ் பானர்ஜியும், பா.ஜனதா சார்பில் திலீப் சஹாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளராக பேரோன் பிஸ்வாசும் போட்டியிட்டனர்.

3-வது இடத்தில் பா.ஜனதா

ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் பேரோன் பிஸ்வாஸ் முன்னிலையில் இருந்தார். இறுதியில், அவர் 22 ஆயிரத்து 980 ஓட்டுகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். பா.ஜனதா வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், கடந்த 2 ஆண்டுகளாக சட்டசபையில் பூஜ்யமாக இருந்த காங்கிரஸ் கட்சி, முதல்முறையாக தனது கணக்கை தொடங்குகிறது.

12 ஆண்டுகளில் முதல் தோல்வி

அதே சமயத்தில், இந்த தோல்வி, திரிணாமுல் காங்கிரசுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் இருந்து அத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அக்கட்சி வெற்றி பெற்றிருந்தது. அத்தகைய தொகுதியில், தற்போது தோல்வியை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 12 ஆண்டுகளில் எந்த இடைத்தேர்தலிலும் தோல்வி அடையாத அக்கட்சி, முதல்முறையாக தோல்வி அடைந்துள்ளது.

தனித்து போட்டி

இந்த பின்னணியில், தேர்தல் தோல்வி குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சாகர்டிகி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக யார் மீதும் நான் பழி சுமத்த விரும்பவில்லை. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் மாறிமாறி வரும். ஆனால், பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கள்ள உறவு நிலவியது. அதை நாங்கள் கண்டிக்கிறோம். பா.ஜனதா தனது ஓட்டுகளை காங்கிரசுக்கு மடைமாற்றம் செய்துள்ளது.

பா.ஜனதாவின் ஆதரவை கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி, இனிமேல் தன்னை 'பா.ஜனதாவுக்கு எதிரான கட்சி' என்று சொல்லிக் கொள்ளக்கூடாது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். மக்கள் ஆதரவை மட்டும் பெற்று போட்டியிடுவோம். பா.ஜனதாவை தோற்கடிக்க விரும்பும் அனைவரும் எங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கருத்து

மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

மத்திய படைகள் இருந்ததால் நேர்மையான தேர்தல் நடத்துவது சாத்தியமானது. ஜனநாயக சக்திகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால், மம்தா பானர்ஜியை எளிதாக வீழ்த்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story