திருப்பதி லட்டு பிரசாதத்தில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டும் - கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த பக்தர்!
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக சுவை மிகுந்த லட்டுகள் வழங்கப்படுவது வழக்கம்.
திருப்பதி,
திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக சுவை மிகுந்த லட்டுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இனிப்பு அதிகமாக உள்ள லட்டு பிரசாதத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், திருமலையில் உள்ள அன்னமையா பவனில், நேரடி தொலைபேசி நிகழ்ச்சியான "உங்கள் ஈஓ-ஐ டயல் செய்யுங்கள்" நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பக்தர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் (ஈஓ) பதில் அளித்தார்.
அப்போது குண்டூரில் இருந்து ஸ்ரீ தசரத ராமையா என்ற அழைப்பாளர் பேசுகையில், "லட்டு பிரசாதத்தில் சர்க்கரையின் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த செயல் அலுவலர் கூறுகையில்,"அனைத்து பிரசாதமும் நைவேத்யமும் "தித்தம்" - பிரசாதம் தயாரிப்பதற்கு எந்த அளவு பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான ஒரு குறிப்பிட்ட சூத்திரத்தின்படி தயாரிக்கப்படுகின்றன.
லட்டு பிரசாதங்களை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே தயாரிக்கிறார்கள். தினமும் 5-6 லட்சம் வரை லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. எனினும் நாங்கள் இந்த பரிந்துரையை கவனத்தில் கொள்வோம்" என்று பதிலளித்தார்.
இந்நிலையில், வருங்காலங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்க ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.