திருப்பதி லட்டு விவகாரம்: விசாரணை குழு அமைப்பு


திருப்பதி லட்டு விவகாரம்: விசாரணை குழு அமைப்பு
x

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அமராவதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நைவேத்தியத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கடந்த ஆட்சியில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டினார்.

இதனால் நெய்யை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த நெய்யில் கலப்படம் செய்திருந்தது உறுதி ஆனது. நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குண்டூர் சரக டி.ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா திரிபாதி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர அரசு அமைத்துள்ளது. டி.ஐ.ஜி. அந்தஸ்து கொண்ட கோபிநாத் ஷெட்டி, கடப்பா எஸ்.பி. ஹர்ஷவர்தன் ஆகியோர் விசாரணை குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழு விரிவாக விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது. தாக்கல் செய்யப்படும் அறிக்கையின்படி லட்டு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story