திருப்பதி பிரம்மோற்சவ விழா; ஊழியர்களுக்கு ஆடைகள், ஊக்கத்தொகை - அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் ஆடைகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதியில் இருந்து கடந்த 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. விழாவில் பணியாற்றிய வாகனங்களை தூக்குபவர்கள், மேளம் வாசிப்பவர்கள், வேத பாராயணர்கள், ஜீயங்கார்களின் சீடர்கள் குழு, துப்புரவுப் பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு வஸ்திரங்கள் மற்றும் ஊக்கத்தொகை பரிசாக வழங்கும் நிகழ்ச்சி திருமலையில் உள்ள வைபவ மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் பிரம்மோற்சவ விழாவில் பணியாற்றிய மேற்கண்ட 2 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு வஸ்திரங்களை பரிசாக வழங்கினர். ரூ.40 லட்சம் மதிப்பிலான வஸ்திரங்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான டெல்லி உள்ளூர் தகவல் மைய தலைவர் வேமிரெட்டி பிரசாந்திரெட்டி தம்பதியர் காணிக்கையாக வழங்கினர்.
அதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர் குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து வாகனம் தூக்குவோருக்கு தலா ரூ.81 ஆயிரத்து 500 வீதம் ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.64 லட்சத்து 50 ஆயிரத்தை பரிசாக வழங்கினார்.