அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி தாமஸ் ஐசக் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல்


அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி தாமஸ் ஐசக் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல்
x

கேரள முன்னாள் நிதி மந்திரி தாமஸ் ஐசக், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருவனந்தபுரம்,

பினராயி விஜயன் தலைமையிலான முதல் சிபிஎம் ஆட்சியில் (2016 - 2021) நிதியமைச்சர் ஆக இருந்தவர் பேராசிரியர் தாமஸ் ஐசக் . இவர் கேரளா உட்கட்டமைப்பு நிறுவனத்தின் (கிஃபீ) துணை சேர்மேனாகவும் பதவி வகித்து வந்தார். இவர் பதவி வகித்து வந்த கால அளவில் அன்னிய செலாவணி சட்டத்தை மீறி கிஃபி அமைப்பிற்கு நிதி திரட்டியதாக பரவலாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்கு ஆஜராக வருமாறு அவருக்கு இரண்டு முறை அமலாக்கத்துறை சம்மன் வழங்கியது. ஆனால் இரண்டு முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், " நான் செய்த குற்றத்தை என்னிடம் தெரிவிக்குமாறு அமலாக்கத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக இது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர்களால் குற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

நான் இணங்கப் போவதில்லை. என் உரிமையை பாதுகாக்க கேரள ஐகோர்ட்டை நாடியுள்ளேன். அமலாக்கத்துறையினரின் தன்னிச்சையான செயல்களில் இருந்து தடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

அமலாக்கத்துறையினர் சரியான காரணத்தை கூறினால், நான் அவர்கள் முன் ஆஜராவதில் எனக்கு ஆட்சேபனையும் இல்லை.

மேலும், அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல் கருவி. அவர்கள் எதிர்க்கட்சியினரை தனிமைப்படுத்துவதற்கும், கைது செய்வதற்கும் அல்லது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கவும் அமலாக்கத்துறையை பயன்படுத்துகின்றனர். " இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story