ஆசிரியரை பிரிய மனமின்றி கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள்; வைரலான வீடியோ


ஆசிரியரை பிரிய மனமின்றி கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள்; வைரலான வீடியோ
x

உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் விடை பெற்று சென்றபோது, அவரை பிரிய மனமின்றி மாணவ மாணவியர் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வைரலாகி வருகின்றன.



லக்னோ,



உத்தர பிரதேசத்தில் உள்ள பள்ளி கூடமொன்றில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் வேறு இடத்தில் உள்ள பள்ளிக்கு பணியாற்ற செல்ல வேண்டும்.

கடைசி நாளில் மாணவ மாணவியரிடம் விடை பெற்று கொண்டு புறப்பட அவர் தயாரானார். ஆனால், ஆசிரியர் என்பவர் ஒரு நண்பராக, தத்துவஞானியாக மற்றும் நல்லதொரு வழிகாட்டியாக உள்ளார் என்ற சொற்றொடரின்படி, மாணவர், ஆசிரியர் பிணைப்பு என்பது பிரிக்க முடியாத ஒன்றாகவும் உள்ளது.

இதேபோன்று, அந்த ஆசிரியர் செல்லும்போது, அவரிடம் படித்த மாணவ மாணவியர்கள் கண்ணீர் மல்க அவரை வழியனுப்பி வைத்தனர். சிறிது தூரம் அவருடனேயே நடந்து சென்றனர். அவருடன் இருப்பது அன்று ஒரு நாளே கடைசி என்பதனால், சிலர் அன்பின் மிகுதியால் அவரை கட்டி பிடித்து அழுதனர்.

வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட அந்த ஆசிரியர், அதன்பின் அவர்களை தேற்றினார். ஆறுதல் அளிக்கும் வகையில் அவர்களிடம் பேசினார். பின்பு, அவர்களை நோக்கி கையசைத்து விட்டு இறுதியாக விடை பெற்று சென்றார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனை கவனித்த நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பகிர்ந்து உள்ளனர்.

என்னவொரு ஆச்சரியமிக்க ஆசிரியர். அந்த பள்ளியில் ஊக்கமளிக்கும் சக்தியாக அவர் இருந்திருக்க கூடும். அதனாலேயே ஒவ்வொரு குழந்தையும் சத்தமிட்டு அழுதுள்ளது என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

அடிமட்ட நிலையில் இருந்து உங்களை ஆசிரியர் ஒருவர் வளர்க்கிறார் என்றால், (படிப்பு முடிந்த பின்னரும்) அவர்களை விட்டு பிரிவது மிக மிக கடினம் என மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.

ஒரு நல்ல ஆசிரியரின் மதிப்புகளை பாருங்கள். 7 முதல் 8 வயதுள்ளவர்கள் கூட ஒரு நல்ல ஆசிரியரால் வழிகாட்டப்பட்டதன் மதிப்பை உணர்ந்து உள்ளனர். இதுபோன்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிக ஆற்றல் கிடைக்கட்டும் என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ். அதிகாரி அவனீஷ் சரண் என்பவர் வெளியிட்டு உள்ளார். இதனை 8.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் விமர்சனங்களையும் பகிர்ந்து உள்ளனர்.




Next Story