மனைவி ஊர் சுற்றியதால் அரசு பஸ் கண்டக்டரை கத்தியால் குத்த முயன்ற கணவர்


மனைவி ஊர் சுற்றியதால் அரசு பஸ் கண்டக்டரை கத்தியால் குத்த முயன்ற கணவர்
x

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டம் அமலில் உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டம் அமலில் உள்ளது. இதனை பயன்படுத்தி ஏராளமான பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணித்து வருகிறார்கள். இலவச பயணம் என்பதால் குடும்ப பெண்கள் பலரும், தோழிகளுடன் சுற்றுலா மற்றும் கோவிலுக்கு சென்று வருகிறார்கள். இதனால் வீடுகளில் இருக்கும் கணவர்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு சிக்கசந்திரா பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நாகா என்பவரின் மனைவி, கடந்த சில மாதங்களாக இலவச பயண திட்டத்தை பயன்படுத்தி அரசு பஸ்களில் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் நாகா ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி மீண்டும் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுவிட்டார். இதனால் அவர் மேலும் ஆத்திரம் அடைந்தார்.

இதற்கிடையே மதுபோதையில் இருந்த நாகா, சாலையில் சென்ற கர்நாடக அரசு பஸ் ஒன்றை தடுத்து நிறுத்தினார். அப்போது கீழே இறங்கி வந்த கண்டக்டரை, தான் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் நாகாவிடம் இருந்து கத்தியை பிடுங்கினர். பின்னர் அவரை நெலமங்களா போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இலவச பயண திட்டத்துக்கு பிறகு மனைவி, அரசு பஸ்களில் ஊர் சுற்றி வந்ததால், ஆத்திரத்தில் கண்டக்டரை கத்தியால் குத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இலவச பயண திட்டத்தில் மனைவி ஊர் சுற்றியதால் அரசு பஸ் கண்டக்டரை கணவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story