விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானை கூட்டம் அட்டகாசம்


விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானை கூட்டம் அட்டகாசம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாலூரில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகூட்டம் விளைநிலத்திற்குள் புகுந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான விளை பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றன.

கோலார் தங்கவயல்

காட்டுயானைகள் அட்டகாசம்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா காமசமுத்திரம் மற்றும் மாலூர் தாலுகா தமிழக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் தமிழக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் கூட்டம் காமசமுத்திரம், மாலூர் தாலுகாவில் உள்ள விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்தி வருகின்றன.

இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க முடியவில்லை. இந்தநிலையில் மீண்டும் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

விளை பயிர்கள் நாசம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாலூர் தாலுகா மாஸ்தி கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட சின்னசந்திரா, சங்கேனஹள்ளி, கோமமாதனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமத்திற்குள் 20-க்கும் அதிகமான காட்டுயானைகள் கூட்டமாக புகுந்தது.

இந்த காட்டுயானைகள் கிராமத்தில் இருந்த விளை நிலத்திற்குள் நுழைந்து, நெல், பப்பாளி, கரும்பு, முட்டை கோஸ், காளிப்பிளவர் உள்ளிட்ட விளை பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றன.

நேற்று காலை சம்பந்தப்பட்ட விவசாயிகள் விளை நிலத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த பயிர்கள் அனைத்தும் காட்டுயானைகள் மிதித்து நாசப்படுத்தியது தெரியவந்தது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வனத்துறை அதிகாரிகளை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தினர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அப்போது அவர்கள் காட்டுயானைகள் அட்டகாசம் பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உயிர் பலிகள் ஏற்படுவதுடன், விளை பயிர்களும் நாசமாகியுள்ளது.

தற்போது காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளது. இந்த விளை பயிர்களுக்கு சரியான இழப்பீடு தொகை வழங்கவேண்டும்.

மேலும் காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லைெயன்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.

இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story